கோயில் திருவிழாவில் தகராறு... 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை!
காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் சந்துரு மற்றும் விக்கி ஆகிய இரண்டு இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மதுபோதையில் இருந்த ஒரு கும்பல் ஒலிபெருக்கியில் கானா பாடல் போடுமாறு கேட்டுள்ளது. அதற்கு அங்கிருந்தவர்கள் மறுப்பு தெரிவித்ததால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றிப் பலத்த மோதலாக மாறியுள்ளது.
இந்த ஆத்திரத்தில் அந்த போதை கும்பல் சந்துரு மற்றும் விக்கி ஆகிய இரு இளைஞர்களையும் கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இக்கொடூர சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான கொலையாளிகளைப் பிடிக்க வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவில் நடந்த இந்த இரட்டைக் கொலை அப்பகுதியில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.