செல்போனால் தகராறு... தூங்கிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரை அடித்துக் கொன்ற போதை ஆசாமி!
தெற்கு டெல்லியின் பேகம்பூர் பகுதியில், மது போதையில் ஏற்பட்ட சிறிய தகராறு ஒரு மனித உயிரைப் பறித்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதல், கொலையில் முடிந்துள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் (எ) கைலி (25) என்பவர், டெல்லியில் ஒரு பழைய இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு, ராகேஷ் மது போதையில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்ருஜன் என்பவரின் செல்போனை வாங்கிப் பயன்படுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், மது போதையில் இருந்த ராகேஷிற்கு ஆத்திரம் குறையவில்லை. நள்ளிரவு 1 மணியளவில், சத்ருஜன் தனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ராகேஷ் ஒரு மரக்கட்டையுடன் உள்ளே புகுந்துள்ளார். உறங்கிக் கொண்டிருந்த சத்ருஜனை மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த சத்ருஜனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய ராகேஷை, டெல்லி போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ராகேஷ் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிபதி நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். செல்போன் போன்ற ஒரு சிறிய விஷயத்திற்காகத் தூங்கிக் கொண்டிருந்தவரைக் கொலை செய்த சம்பவம் டெல்லி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.