திருட்டுப் பணத்தைப் பங்கிடுவதில் தகராறு: 21 வயது இளைஞரைக் கொன்று காலில் கல்லைக் கட்டி ஏரியில் வீசிய நண்பர்கள் கைது!

 

சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் திருட்டுப் பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், 21 வயது இளைஞரை நண்பர்களே கத்தியால் குத்துக் கொன்று காலில் கல்லைக் கட்டி ஏரியில் வீசிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை சூரப்பட்டு சண்முகபுரம் பகுதியில் உள்ள புழல் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். முகத்தில் வெட்டுக் காயங்களுடனும், கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்ட அந்த உடல், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த தச்சர் முகுந்தன் (21) என்பது தெரியவந்துள்ளது.

முகுந்தனும் அவரது கூட்டாளிகளான சஞ்சய் (19), ஹரிகிருஷ்ணன் (23) மற்றும் இரண்டு சிறுவர்களும் சேர்ந்து பைக் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். திருடிய பைக்கை விற்ற பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முகுந்தனைத் தீர்த்துக்கட்ட சஞ்சய் உள்ளிட்டோர் திட்டமிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று புழல் ஏரிக்கரை பகுதியில் அனைவரும் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், சஞ்சய் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகுந்தனின் முகத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக முகுந்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மறைப்பதற்காக முகுந்தனின் காலில் பெரிய கல்லைக் கட்டி ஏரிக்குள் தூக்கி வீசியுள்ளனர். மேலும், கொலையின் போது இரத்தக் கரைகள் படிந்திருந்த பழைய மெத்தையைச் சிறுவர்களின் உதவியுடன் சஞ்சய் தீயிட்டுக் கொளுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக சஞ்சய், ஹரிகிருஷ்ணன் மற்றும் இரண்டு சிறார்கள் உள்பட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.