மதுபோதையில் தகராறு... எஸ்.ஐ.யைத் தாக்கி கீழே தள்ளிய இளைஞர் கைது!

 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பஜார் பகுதியில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாகத் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களைப் பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளரை ஓடும் பைக்கில் இருந்து தள்ளிவிட்டுத் தப்பிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆத்தூர் பஜார் பகுதியில் ராகேஷ் மற்றும் எமர்சன் ஆகிய இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் பொதுமக்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் வகையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகவறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றனர்.

அவர்களைப் பின்தொடர்ந்து பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமியை, ஓடும் பைக்கில் இருந்தவாறே கீழே தள்ளிவிட்டனர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த எமர்சன் என்பவரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.