ட்ரம்ப் பேச்சால் அதிருப்தி... அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்திலிருந்து ஈரான் வெளிநடப்பு!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் லூசெர்னே நகரில் உள்ள பர்கன்ஸ்டாக் சொகுசு விடுதியில் தொடங்கியுள்ளது. எனினும், பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை அறிக்கை காரணமாக அதிருப்தியடைந்த ஈரானியத் தூதுக்குழுவினர் கூட்டத்திலிருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர், பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்காலிக ஒப்பந்தமாக மாறியது. ஆயினும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால், உலக அளவில் முக்கிய எண்ணெய் வர்த்தக வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இந்த உலகளாவிய பொருளாதார மற்றும் விநியோக நெருக்கடிக்குத் தீர்வு காணவே இந்த 60 நாட்கள் நீடிக்கக்கூடிய உயர்மட்டப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
பன்னாட்டு மத்தியஸ்தர்களின் முன்னிலையில் இந்த உயர்மட்ட அமர்வு நடைபெற்றது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அதிபரின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் வித்கோப் ஆகியோர் பங்கேற்றனர். ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையில், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஊடகப் பேச்சுவாளர் எஸ்மாயில் பகாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவத் தளபதி ஆசிம் முனீர், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான், சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர் இஞ்ஞாசியோ காசிஸ் மற்றும் லெபனான் ராணுவத் தளபதி ஜீன் கவாஜி ஆகியோர் மத்தியஸ்தர்களாகப் பங்கேற்றனர்.
இந்திய நேரப்படி நேற்று பிற்பகலில் தொடங்கிய முதற்கட்டக் கூட்டத்தில் லெபனானில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான மோதல்களை உடனடியாக நிறுத்துவது, சர்வதேசக் கப்பல் போக்குவரத்தைச் சீர்செய்ய ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து விடுவது, ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தி, வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பல்லாயிரக் கோடி மதிப்பிலான சொத்துக்களை விடுவிப்பது போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இருதரப்பும் விவாதித்தன.
இந்த விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ஓர் அறிக்கை பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியது.
"லெபனானில் உள்ள தனது ஆதரவு அமைப்புகளை ஈரான் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும், தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றார். இந்த எச்சரிக்கையால் ஆத்திரமடைந்த ஈரானியப் பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை அரங்கிலிருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்தனர். மேலும், அமெரிக்கா தனது வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஈரானிய ஆயுதப் படைகள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப் எச்சரித்துள்ளார். இதனால் முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளதுடன், சர்வதேச அளவில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.