"பேசாம மாமன்ற கூட்டத்தை கலைச்சிடுங்க"... மேயர் பிரியா ஆவேசம்!

 

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிலையில், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு மற்றும் கவுன்சிலர்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக மேயர் பிரியாவும், துணை மேயர் மகேஷ்குமாரும் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார் பேசுகையில், "சைதாப்பேட்டை தொகுதியில் பூங்கா புனரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட விழாவிற்கு எம்.எல்.ஏ மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார். மண்டலக் குழு தலைவருக்கோ அல்லது வார்டு கவுன்சிலருக்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வேண்டும்" எனக் குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று, "எங்கள் வார்டுகளிலும் அரசு நிகழ்ச்சிகள் குறித்துக் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. இதற்கு மாநகராட்சி ஆணையர் சமீரன் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்" என வலியுறுத்திச் அமளியில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்களின் புகாருக்கு ஆதரவாகவும் அதிகாரிகளின் செயல்பாட்டைக் கண்டித்தும் மேயர் பிரியா பேசுகையில், "மாமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, மேயரான எனக்கே இதே நிலைமை தான். முதலமைச்சர் ரிப்பன் மாளிகைக்கு ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும் தகவல் கூட எனக்கு முன்னதாக முறையாக தெரிவிக்கப்படுவதில்லை. ஆனால் வெளியில் 'மேயர் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார்' எனச் செய்திகள் வருகின்றன. நான் காலை முதல் இரவு வரை ரிப்பன் கட்டடத்திலேயே உட்கார்ந்திருக்க முடியுமா?

மக்கள் குறைகளைக் கேட்டுத் தொடர்ந்து பாடுபட்டு ஒரு திட்டத்தைக் கொண்டு வரும் கவுன்சிலர்களைப் புறக்கணித்து விட்டு, எம்.எல்.ஏ-க்கள் மட்டும் வந்து திறந்து வைப்பதா? எம்.எல்.ஏ-க்களும் மக்கள் பிரதிநிதிகள் தான், நாங்களும் மக்கள் பிரதிநிதிகள் தான். மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க விருப்பமில்லை என்றால் பேசாமல் மாமன்றத்தைக் கலைத்துவிடுங்கள், அதிகாரிகளே கூட்டத்தை நடத்திக் கொள்ளட்டும்" என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய துணை மேயர் மகேஷ்குமார், "பிரதமரின் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்த போது மேயர் மரபுப்படி சென்றார். அதே போல முதலமைச்சரின் நிகழ்ச்சிக்கும் முறையாக அழைத்தால் நிச்சயம் மேயர் பங்கேற்பார்" எனக் கூறினார்.

மாநகராட்சி ஆணையர்  முன்னிலையில் மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் அதிகாரிகளுக்கு எதிராக வெளிப்படையாக குரல் எழுப்பியது சென்னை மாநகராட்சி வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.