வாக்காளர்களுக்கு விநியோகமா? ஆவணங்களின்றி பிடிப்பட்ட 300 சில்வர் குடங்கள் பறிமுதல்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு விநியோகிக்கப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கப் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோமந்தபுத்தூர் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயசித்ரா தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட போது, வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சத்யநாராயணன் என்பவருக்குச் சொந்தமான மினி டாடா ஏஸ் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த வாகனத்தில் 300-க்கும் மேற்பட்ட சில்வர் குடங்கள் ஏற்றிச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.

அந்தப் பொருட்களுக்கான முறையான ரசீதுகள் அல்லது உரிய ஆவணங்கள் எதுவும் ஓட்டுநரிடம் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 300 சில்வர் குடங்களின் மொத்த மதிப்பு ₹99,130 ஆகும்.

கைப்பற்றப்பட்ட குடங்கள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் சதிஸ்குமார் முன்னிலையில் போளூர் அரசு கருவூலத்தில்  பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.