வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தொகுதிகளுக்குப் பிரிப்பு!

 

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பிரித்து ஒதுக்கும் பணி, சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் இந்தப் பணிகள் நடைபெற்றன. எந்தத் தொகுதிக்கு எந்த இயந்திரம் செல்லும் என்பதில் எவ்விதத் தலையீடும் இருக்கக்கூடாது என்பதற்காக, கணினி மூலம் குலுக்கல் முறையில்  இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே இந்தப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றன. அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டன.

சென்னையில் உள்ள மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில், முதற்கட்டமாக 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் அந்தந்தத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு, 24 மணி நேரத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் ஜி.பி.எஸ் கண்காணிப்பு வசதிகள் குறித்தும் மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன் நேரில் ஆய்வு செய்தார். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, வாக்குப்பதிவிற்கு முன்னதாக இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.