திவ்யா சேஷாத்ரி புகார் எதிரொலி.. பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்!
பாஜகவின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலர் திவ்யா சேஷாத்ரி அளித்த புகாரைத் தொடர்ந்து, மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து திருச்சியில் வசித்து வரும் பாஜக மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலர் திவ்யா சேஷாத்ரி, மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது தேசியத் தலைமையிடம் அதிகாரப்பூர்வப் புகாரளித்துள்ளார்.
கருப்பு முருகானந்தம் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதுடன், சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்ததாகவும், தன் விருப்பத்திற்கு மாறாகக் கருவைக் கலைக்கக் கட்டாயப்படுத்தியதாகவும் திவ்யா சேஷாத்ரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இப்புகார் மீது உரிய காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தி, விசாரணை முடியும் வரை முருகானந்தத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், மாநிலப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் உடனடியாக நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.