தீபாவளி போனஸ்...ரூ.49.69 கோடி நிதி ஒதுக்கீடு.. கூட்டுறவு, சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 20% வரை போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதிலும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 44,573 பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் மொத்தம் ரூ.49.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை என மொத்தம் 18 சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5,190 தொழிலாளர்கள் பயன்டையும் வகையில் இரு பிரிவுகளாக போனஸ் பிரிக்கப்பட்டுள்ளது:
ஒதுக்கீட்டு உபரி நிதி கொண்டுள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் கள்ளக்குறிச்சி - II கூட்டுறவு சர்க்கரை ஆலை. சட்டப்பூர்வ மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணைத் தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கப்படும்.
மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள். சட்டப்பூர்வ மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணைத் தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கப்படும்.
சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கான இந்த போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.3.51 கோடி (ரூ.351.40 லட்சம்) கூடுதல் செலவினம் ஏற்படும்.
பண்டிகைக் காலத்தில் அரசின் இந்த அறிவிப்பு கூட்டுறவு மற்றும் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.