தீபாவளிக்கு முன்பே உயர்ந்த பருப்பு விலை! துவரம் பருப்பு கிலோ ரூ.155; மேலும் அதிகரிக்க வாய்ப்பு!
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு ஆகியவற்றின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே விலை அதிகரித்துள்ளதால், பண்டிகை காலத்தில் குடும்பங்களின் மளிகைச் செலவு கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடக வரத்து குறைவு
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வறட்சி காரணமாக பருப்பு வகைகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு வரும் பருப்பு வகைகளின் வரத்து குறைந்துள்ளது. மறுபுறம், தீபாவளியை முன்னிட்டு பருப்பு வகைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
தற்போதைய விலை நிலவரம்
தற்போது துவரம் பருப்பு கிலோ ரூ.155-க்கும், உளுந்து ரூ.150-க்கும், பாசிப்பருப்பு ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பண்டிகைக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வியாபாரிகளிடம் போதிய இருப்பு இல்லாததும் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் பருப்பு வகைகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தீபாவளி சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கும் மக்கள், கடைகளில் நிலவும் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது உதவியாக இருக்கும்.