தீபாவளி தொடர் விடுமுறை...  விமான டிக்கெட் கட்டணம் 700% உயர்வா?   பயணிகள்  அதிர்ச்சி!

 

 

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு விமானக் கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சென்னை – மதுரை இடையிலான விமான டிக்கெட் கட்டணம் வழக்கமாக சுமார் ரூ.4,730 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.16,700 வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளும் இந்தக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில முக்கிய வழித்தடங்களில் வழக்கமான கட்டணத்தைவிட 2 முதல் 7 மடங்கு வரை விமானக் கட்டணம் அதிகரித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கிடையே, விமானக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது, விமானக் கட்டணம் 700 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதைக் கேட்ட நீதிபதி விக்ரம் நாத், "விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம்" என்று கூறி, வழக்கை அவசரமாகப் பட்டியலிட மறுத்தார்.

ஏற்கெனவே நிலுவையில் உள்ள இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. பண்டிகைக் காலங்களில் விமானக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது