களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்... சென்னையில் இன்று மெட்ரோ ரயில் சேவை நேரம் நள்ளிரவு வரை நீட்டிப்பு!

 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் தடையின்றி ஷாப்பிங் செய்யவும், பண்டிகைக் காலப் பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளவும் ஏதுவாக இன்று மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் நகரின் முக்கிய வணிகப் பகுதிகளில் ஷாப்பிங் செய்பவர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

வழக்கமாக மாலை 5 மணிக்குத் தொடங்கும் 'பிக்-அவர்'  ரயில் சேவைகள், பயணிகளின் வசதிக்காக இன்று மாலை 4 மணிக்கே தொடங்கப்படும். இந்த அதிவேக ரயில் சேவையானது இரவு 9 மணி வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தாமதமாக வீடு திரும்புவதைக் கருத்தில் கொண்டு, மெட்ரோவின் 3 முக்கிய வழித்தடங்களிலும் கடைசி ரயில் புறப்படும் நேரத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக இரவு 11 மணிக்கு முனையங்களில் இருந்து புறப்படும் கடைசி ரயில்கள், இன்று நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும். மஞ்சள் வழித்தடத்தில் வழக்கமாக இரவு 9 மணிக்கு நிறைவடையும் ரயில் சேவைகள், இன்று இரவு 11 மணி வரை இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, பொதுமக்கள் அனைவரும் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்திப் பாதுகாப்பான, வசதியான மற்றும் தங்குதடையற்ற பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பயணிகள் தங்களது பயணங்களை முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.