தீபாவளி சிறப்பு சலுகை: கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி ரகங்களுக்கு 30% வரை தள்ளுபடி அறிவிப்பு!

 

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து விற்பனையகங்களிலும் கைத்தறி ரகங்களுக்குச் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸின் அனைத்துக் கிளைகளிலும் விற்கப்படும் கைத்தறி ரக ஆடைகளுக்கு 30 சதவீதம் வரை அதிரடித் தள்ளுபடி வழங்கப்படுகிறது. உதகையில் நடைபெற்ற தொடக்க விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்து விளக்கேற்றி இச்சலுகைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தள்ளுபடியுடன் சேர்த்து வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் 'தங்க மழை' எனும் சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் ரூ.2,000 அல்லது அதற்கு மேல் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்குக் குலுக்கல் கூப்பன் வழங்கப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்குத் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காஞ்சிபுரம், கோவை, சேலம், ஆரணி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவு செய்யப்பட்ட புதிய வடிவமைப்பு மென்பட்டு சேலைகள், உயர் ரக பருத்தி சேலைகள், கோவை காட்டன், கோரா காட்டன், செட்டிநாடு காட்டன் மற்றும் ஜெயங்கொண்டம் சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆடைகள் மட்டுமின்றி, ஏற்றுமதி தரத்திலான படுக்கை விரிப்பான்கள் (Bedspreads) மற்றும் தலையணை உறைகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறிப் பொருட்களும் இந்தச் சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் இடம்பெற்றுள்ளன.