“தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங்: ஒரே நாளில் 20 லட்சம் டிக்கெட்டுகள்! IRCTC புதிய சாதனை”!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு பயணிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, IRCTC வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் அதிகமான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 20,06,353 டிக்கெட்டுகள்!
செப்டம்பர் 7-ம் தேதி IRCTC ஆன்லைன் தளத்தில் மொத்தம் 20,06,353 ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. IRCTC வரலாற்றில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச ஆன்லைன் முன்பதிவு இதுவாகும்.இதற்கு முன்பு கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் ஒரே நாளில் 18,40,203 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது புதிய எண்ணிக்கை முறியடித்துள்ளது.
அடுத்த நாளும் 19.50 லட்சம் டிக்கெட்டுகள்!
செப்டம்பர் 7-ம் தேதி ஏற்பட்ட சாதனைக்கு அடுத்த நாளான செப்டம்பர் 8-ம் தேதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அன்று 19,50,699 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்திய ரயில்வேயின் முன்பதிவு டிக்கெட்டுகளில் சுமார் 89 சதவீதம் ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்யப்படுவதாக IRCTC தெரிவித்துள்ளது. பண்டிகைக் கால தேவை அதிகரித்துள்ள நிலையில், ஆன்லைன் முன்பதிவு அமைப்பின் திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி டிக்கெட்டுக்கு ஏன் இவ்வளவு போட்டி?
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணிகள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்குச் செல்லவும், பண்டிகை முடிந்து திரும்பவும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் IRCTC தளத்தில் முன்பதிவு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.