“திமுக - அதிமுக இணைந்து ஆட்சியா?” - கனிமொழி எம்பி சொன்ன 'ஒற்றை' பதிலால் மீண்டும் பரபரப்பு!

 

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், பரஸ்பரம் எதிரெதிர் துருவங்களாக விளங்கும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

இது குறித்துத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் இன்று (மே 8) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா?" என்ற கேள்விக்கு மிகச் சுருக்கமாகப் பதிலளித்த அவர், "உங்களது யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அதிமுக - திமுக இணைந்த ஆட்சி என்ற தகவலை அவர் நேரடியாக மறுக்கவில்லை என்றாலும், இது வெறும் ஊடக யூகங்கள் மட்டுமே என்பதைத் தனது பதில் மூலம் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அதிமுக-வுடன் இணைந்த ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என திமுக-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தவெக மற்றும் அதிமுக இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படும் சூழலில், இத்தகைய தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் திமுக தரப்பு குற்றம் சாட்டுகிறது.

தற்போது தவெக 108 இடங்களுடனும், அதிமுக 60-க்கும் மேற்பட்ட இடங்களுடனும், திமுக 50-க்கும் மேற்பட்ட இடங்களுடனும் உள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட ஒவ்வொரு கட்சியும் தனித்தனி வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்தச் சூழலில், திராவிடக் கட்சிகள் ஒன்றிணைவது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகவே அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.