திமுக பேனர் சரிந்து விழுந்து மாணவி படுகாயம்.. காவு வாங்கும் அரசியல்வாதிகள்!

 

பேனர் சரிந்து விழுந்து உயிரைக் காவு வாங்கும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. நீதிமன்றம் இது குறித்து அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள், சட்டத்தை கடுமையாக்குதல் என்று எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, உதிரி கட்சி என்று பாகுபாடு ஏதும் இல்லாமல் பொது இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் பேனர் வைப்பதும், நடுரோட்டில் பள்ளம் பறித்து கொடிக்கம்பங்களை நடுவதுமாக தமிழக அரசியல்வாதிகள் செய்கிற அலப்பறைக்கு அளவேயில்லை  

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதில், திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனின் சாதனை விளக்கப் பேனர் சரிந்து விழுந்ததில், அந்த வழியே சென்றுக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் தலையில் விழுந்து மாணவி பலத்த காயமடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோணங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாரணி (16). இவர் பிளஸ் ஒன் படித்து வருகிறார். இன்று மாலை பள்ளி சிறப்பு வகுப்பு முடிந்து, காளிப்பட்டி பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் திடீரென பலத்த சூறாவளிக் காற்று வீசியது.

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் தனது தொகுதி சாதனைகளை விளக்கி அந்தப் பகுதியில் பிரம்மாண்ட பேனர் வைத்திருந்தார். காற்றின் வேகம் தாங்காமல் அந்தப் பேனர் திடீரெனச் சரிந்து, அங்கு நின்று கொண்டிருந்த மாணவி தாரணியின் தலையில் பலமாக விழுந்தது. தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு முதலுதவி செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து ஓடிவந்த மாணவியின் தந்தை, மகளின் உடல்நிலையே முக்கியம் எனக் கூறி, எவ்வித வழக்கும் செய்தியும் வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு, அவரைத் தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றார். இந்தச் சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்கு இடையூறாகவும், ஆபத்தாகவும் வைக்கப்படும் பேனர்களுக்கு எதிராக நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும், அரசியல் கட்சியினர் தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவது காளிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.