“தவெக தோற்க நிர்மல்குமார் தான் காரணமாக இருப்பார்” - திமுக வேட்பாளர் பரந்தாமன்!
மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
திமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருந்த கருத்துக்கு, மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பரந்தாமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பல கட்சிகளால் ஒதுக்கப்பட்டு உசிலம்பட்டியிலிருந்து ஓடிய நிர்மல்குமாருக்கு திமுகவை விமர்சிக்க எந்தவித அருகதையும் இல்லை என்று பரந்தாமன் கடுமையாகச் சாடியுள்ளார்.
பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்துப் பிடித்துக் கட்சியில் சேர்த்ததன் காரணமாகவே தற்போதைய இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் மின்வெட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படாத நிலையில், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தவெக படுதோல்வி அடைய நிர்மல்குமாரே முக்கியக் காரணமாக இருப்பார் என்றும் பரந்தாமன் விமர்சித்துள்ளார்.