"வைகோ குதிரை பேரத் திட்டத்தில் செயல்படுகிறார்" - திமுக நிர்வாகி குற்றச்சாட்டு!

 

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்வதற்கு முதலமைச்சர் விஜய் யார் என்று திமுக தேனி மேற்கு மாவட்டச் செயலாளர் கம்பம் ராதாகிருஷ்ணன் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த கம்பம் ராதாகிருஷ்ணன், தவெக மற்றும் மதிமுகவிற்கு இடையே திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செயல்படுவதற்குப் பின்னணியில் ஏதோ ஒரு பெரிய விஷயம் நடந்துள்ளது. வைகோவும் முதலமைச்சர் விஜய்யும் இணைந்து வகுத்த குதிரை பேரத் திட்டத்தையும் , அவர்களின் எண்ணத்தையும் தற்பொழுது மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள முற்றிலும் மறுத்து விட்டனர்.

மதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தவெகவின் திட்டங்களுக்கு அடிபணியாமல் மக்களுக்கு விரோதமாக எவ்விதச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்பதில் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்பொழுது தீர்க்கமான முடிவை எடுத்துள்ளதாகத் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, கூட்டணி மற்றும் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தன்பக்கம் ஈர்க்கும் முயற்சிகள் நடப்பதாக எழுந்துள்ள புகார்கள், திமுக மற்றும் தவெக கூட்டணி கட்சிகளிடையே அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.