"ரூ.3 கோடி வரை வசூல்" - திமுக நிர்வாகி அரசகுமார் ரூ.200 கோடி வரை மோசடி.. விசாரணை வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
தனியார் பள்ளிகளுக்கு அரசின் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை பிரம்மாண்டப் பண மோசடி செய்த வழக்கில், திமுக நிர்வாகியும் தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கத் தலைவருமான பி.டி. அரசகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முத்துக்குமார் ஆகிய இருவரைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த விவகாரம் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் தங்களது கல்வி நிறுவனங்களுக்கான முறையான அரசு அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், பிற அனுமதிகளைப் பெறவும் லட்சக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாகப் புகார்கள் எழுந்தன.
இந்த முறைகேடுகள் மற்றும் பணமோசடி சம்பவங்கள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சியின் போது நடைபெற்றதாகப் பாதிக்கப்பட்ட பள்ளி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட இந்த மோசடி, தற்போதைய விசாரணையில் 200 கோடி ரூபாய் வரை நீண்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பி.டி. அரசகுமார் தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்திப் பெருமளவு பணத்தைச் சுருட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. ஒவ்வொரு தனியார் பள்ளி நிர்வாகத்திடமிருந்தும் அவர்களது தேவைக்கேற்பக் குறைந்தபட்சம் 25 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் வரை அரசகுமார் தரப்பு பணத்தைப் பறித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணம் கொடுத்து ஏமாந்த 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கி, அவர்களின் அதிகாரப்பூர்வ வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகி பி.டி. அரசகுமாரிடம் இந்த மோசடிப் பணத்தின் வரவு செலவு கணக்குகள் மற்றும் இதில் வேறு எந்தெந்த முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பிருக்கிறது என்பதை தோண்டித் துருவக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முடிவு செய்துள்ளது. கல்வி நிறுவனங்களை அச்சுறுத்தி அரங்கேற்றப்பட்டுள்ள இந்த 200 கோடி ரூபாய் பண மோசடிச் சம்பவம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.