"ரூ.1 கோடி தர்றேன்.." திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சம்பந்தி கண்ணன் ரவி சவால்!
திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தி திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, அவரது சம்பந்தியும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான கண்ணன் ரவி காட்டமாகப் பதிலளித்து, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடுத்து விளக்கம் அளித்துள்ளார்.
திமுக எம்பி கதிர் ஆனந்தின் மகளுக்கும், தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகனுக்கும் இடையே கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற திருமணம் வைதீக முறைப்படி நடந்ததற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட சிலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதற்கு துரைமுருகன் முன்னதாக வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த கண்ணன் ரவி காரசாரமாகப் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், "கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவரவர் மத முறைப்படி திருமணத்தை நடத்துகிறார்கள். நான் ஒரு இந்து, அதனால் எங்கள் முறைப்படி திருமணத்தை நடத்தினேன். இதில் என்ன தவறு இருக்கிறது? திருமணம் என்பது முற்றிலும் இரு குடும்பங்களின் தனிப்பட்ட விஷயம்; அது கட்சி சார்ந்த விஷயம் கிடையாது. இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெறும் திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய எனக்கு முழு உரிமை உள்ளது. யார் தடுத்தாலும் எனது மதம் மற்றும் இனத்திற்கு உரிய உரிமையை நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்."
தொடர்ந்து பேசிய அவர், அரசியல் வட்டாரத்தில் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் சவால் விடுத்துப் பேசினார். "திமுகவில் இருப்பவர்களின் குடும்பத்தினர் அனைவரும் கோயில்களுக்குச் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். தங்கள் சொந்தக் குடும்பத்தையே கட்டுப்படுத்த முடியாதவர்கள் எதற்காக வெளியில் வந்து பேச வேண்டும்? எனக்கு யாரைப் பார்த்தும் பயமில்லை. நான் எந்த அரசியல்வாதிக்கும் பினாமி கிடையாது. நான் பினாமி என்று யாராவது நிரூபித்தால் அவருக்கு ரூ.1 கோடி தருகிறேன்" எனக் காட்டமாகக் குறிப்பிட்டார்.
ஏற்கனவே துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கைக்கும், அவரது சம்பந்தி கண்ணன் ரவி அளித்த இந்த பேட்டிக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதால், இத்திருமண சர்ச்சை அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் மேலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.