"25 நாட்களாகத் தவிக்கும் திமுக!" - ஆலந்தூரில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

 

சென்னை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணிக்குள் நிலவும் தொகுப் பங்கீட்டு இழுபறிகளை எள்ளி நகையாடியுள்ளார்.

பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக கூட்டணியில் வெறும் 4 நாட்களில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைச் சுமுகமாக முடித்து விட்டோம். ஆனால், திமுக கூட்டணியில் 25 நாட்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இழுபறி நீடிக்கிறது" எனக் குறிப்பிட்டார். 10 ஆண்டுகளாக திமுகவுடன் இருக்கும் கட்சிகளுக்குக் குறைவான தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, புதிதாக வந்த கட்சிக்கு அதிக இடங்களை வழங்கியுள்ளனர். இது அந்தப் பழைய கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்கள் இல்லாத நிலையிலும் கடந்த தேர்தலில் அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெறாத நிலையைச் சந்தித்துள்ளது" எனச் சாடினார். அதிமுகவிற்குத் திரண்டுள்ள மக்கள் வெள்ளத்தைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் அதிர்ந்து போயுள்ளார். ஆலந்தூர் தொகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டை என்பதற்கு இன்றைய கூட்டமே சாட்சி என்றார்.

திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணைத் தொட்டுவிட்டது. அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகம் தற்போது கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது என வேதனை தெரிவித்தார். கொரோனா காலத்தில் வருமானம் இல்லாத போதும் அதிமுக அரசு சிறப்பான சேவையை வழங்கியது. ஆனால், திமுக அரசு மக்களின் செல்வாக்கை முழுமையாக இழந்துவிட்டது எனக் குற்றம் சாட்டினார்.

அதிமுகவில் இருந்து கொண்டே கட்சிக்குக் குழி பறித்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.