"திமுக தீய சக்தி... அதிமுக தீர்ந்து போன சக்தி!" - திருச்சி மேடையில் விஜய் அதிரடி முழக்கம்!
விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த செய்தியும், 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் ஜெயலலிதா கொண்டு வந்தது என்று தி.மு.க-வின் விளம்பர அரசியலைத் தோலுரித்த நிகழ்வும் இன்று தமிழக அரசியல் களத்தில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ள வேளையில், திருச்சி நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்ட மேடையின் இறுதிக்கட்டத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார் முதலமைச்சர் விஜய்.
திருச்சி புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், தன்னைத் தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரதிநிதியாக முன்னிறுத்தியதுடன், தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றுதான் இந்தத் தவெக அரசு என்பதை ஆணித்தரமாக முழங்கினார்.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தி.மு.க தரப்பு தொடர்ந்து கொடுத்து வரும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் அவமானங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர் விஜய், அது தங்களுக்குப் புதிய ஆற்றலையே தருவதாகக் குறிப்பிட்டார்.
"தி.மு.க-வினர் நம்மை எந்த அளவிற்கு எதிர்க்கிறார்களோ, எந்த அளவிற்கு நம்மை அவமானப்படுத்துகிறார்களோ... அந்த அத்தனை அவமானங்களும், எதிர்ப்புகளும் இறுதியில் நமக்கே நன்மையாக வந்து முடியும். மக்கள் எதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார்.
ஒரே பிரதிநிதி நான் தான்: தொடர்ந்து தனது மக்கள் பந்தம் குறித்துப் பேசிய அவர், "இந்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரதிநிதி நான் மட்டும்தான். எனக்கும் இந்த மாநில மக்களுக்குமான உணர்வுப்பூர்வமான பந்தத்தை எந்த ஒரு அரசியல் சக்தியாலும், தந்திரத்தாலும் ஒருபோதும் பிரிக்கவோ, கெடுக்கவோ முடியாது. மக்களின் குரலாக நான் எப்போதும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிப்பேன்" என்று தெரிவித்தார்.
தமிழக அரசியல் களம் தற்பொழுது தவெக மற்றும் தி.மு.க என்ற இரு துருவங்களாக மாறியுள்ளதை விவரித்த முதலமைச்சர் விஜய், அ.தி.மு.க-வையும் கடுமையாகச் சாடினார். "இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் இரண்டு சக்திகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஒன்று மக்களின் நன்மதிப்பைப் பெற்ற 'தூய சக்தி' நமது தமிழக வெற்றிக் கழகம்; இன்னொன்று ஒட்டுமொத்த மக்கள் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள 'தீய சக்தி' தி.மு.க. இதில் அ.தி.மு.க என்பது முற்றிலும் பலமிழந்து, 'தீர்ந்து போன ஒரு சக்தி'யாக மாறிவிட்டது. இந்த இரு கட்சிகளும் சேர்ந்துதான் எங்களை ஆட்சியில் அமர விடாமல் தடுக்கப் பல்வேறு சதி வேலைகளைச் செய்தன. ஆனால், மக்கள் இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்கு வேண்டாம் என்று முடிவு செய்துதான், ஒரு புதிய மாற்றத்திற்காக எங்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர்" என்று ஆவேசமாகப் பேசினார்.
தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கிய அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டார். தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பிற்காகத் தவெக அரசால் பிரத்தியேகமாகத் திட்டமிடப்பட்டுள்ள 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டம் வரும் அடுத்த வாரம் முதல் அதிகாரப்பூர்வமாக மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் விஜய் உறுதியளித்தார்.