தவெகவை கண்டு திமுக பயத்தின் உச்சத்தில் இருக்கிறது.... விஜய் கடும் கண்டனம்!
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் மீது திருச்சி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கான அனுமதி கோரி ஆனந்த் திருச்சி விமான நிலையத்தில் வந்திருந்தார் அப்போது கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் கூடினர். விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு வெளியே வந்தபோது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிகிறது.
போலீஸ் அதிகாரிகளுடன் தவெக தொண்டர்கள் வாக்குவாதம் செய்தனர். போலீஸை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் இதற்காக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, புஸ்ஸி ஆனந்த் உட்பட 6 பேர் மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து விஜய் தனது பதிவில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, திரு. என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.