"திமுக ஆதிக்க சக்தியின் பிடியில் உள்ளது" - திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ்!
திருப்பூர் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க. செல்வராஜ், திமுகவின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தீவிர அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக தலைமை மற்றும் திருப்பூரின் முக்கியப் புள்ளிகளுக்கு எதிராகப் பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தமது நீண்டகால அரசியல் பயணத்தைக் குறிப்பிட்ட செல்வராஜ், கட்சியில் உழைத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என வருத்தம் தெரிவித்தார்.
"கடந்த 1976-ஆம் ஆண்டு தொழிற்சங்கத்தில் இணைந்து எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து திமுக நகரச் செயலாளர், திருப்பூர் மாநகராட்சி மேயர், மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் என 50 ஆண்டுகாலம் கழகத்திற்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துப் பணியாற்றியுள்ளேன். ஆனால், கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் மற்ற கட்சிகளிலிருந்து திமுகவிற்கு வந்தவர்களுக்குத் தான் அதிகளவில் முக்கியத்துவமும் அதிகாரமும் வழங்கப்பட்டு வருகிறது. இது எனக்குள் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது."
அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் தொகுதிப் பங்கீட்டின் போது தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். திருப்பூரின் பிரபல தொழிலதிபரான 'டாலர்' பாலசுப்பிரமணியன் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே, திருப்பூர் மேயராக இருந்த தினேஷ்குமாருக்குத் திருப்பூர் தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. நான் விருப்ப மனுவே அளிக்காத பல்லடம் தொகுதியில் என்னைப் போட்டியிடுமாறு தலைமை பணித்தது. இருந்தாலும், தலைமைக்குக் கட்டுப்பட்டு நான் தேர்தல் பணிகளைச் செய்தேன். ஒரு தொழிலதிபருக்கும், மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும் இருக்கும் அதிகாரம், இத்தனை ஆண்டுகள் உழைத்த எனக்கு இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. தனக்கும் தொழிலதிபர் பாலசுப்பிரமணியனுக்கும் இடையேயான மோதலுக்கான முக்கியப் பின்னணியையும் செல்வராஜ் வெளிப்படுத்தியுள்ளார்:
திருப்பூரில் இஸ்லாமிய மக்களுக்குக் 'கபர்ஸ்தான்' (மயானம்) அமைப்பதற்கான நிலம் வழங்குவதைத் தொழிலதிபர் டாலர் பாலசுப்பிரமணியன் தடுத்து நிறுத்தினார். அதிலிருந்தே எங்களுக்குள் பிரச்சினை ஆரம்பமானது. திமுக தலைவர் திருப்பூர் வரும்போதெல்லாம் அவர் வீட்டில் தங்குவதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, என்னை முற்றிலும் ஓரங்கட்டி விட்டார்கள். கட்சி ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கியுள்ளது என்பதை உணர்த்தவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
எதிர்காலத்தில் திமுக தான் ஆட்சிக்கு வரும், மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று குறிப்பிட்ட செல்வராஜ், அதற்காகத் தன்னைத் தியாகம் செய்வதாகக் கூறினார். மேலும், தனக்குப் பல கட்சிகளிலிருந்து அழைப்புகள் வந்த போதிலும், எந்தவொரு மாற்றுக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் தனக்கில்லை என்றும், அடிப்படை உறுப்பினராக இல்லாவிட்டாலும் கழகத்திற்கு உண்மையாக உழைப்பவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் கூறித் தனது விலகல் கடிதத்தை அறிவித்துள்ளார். திருப்பூரின் மூத்த திமுக தலைவர் ஒருவரின் இந்த விலகல் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.