ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி - திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைத் தனது பெயருக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக பகுதிச் செயலாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை, முறைகேடான முறையில் தனது சொந்த பெயருக்குப் பத்திரப்பதிவு செய்துகொண்டதாகத் திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் மீது தீவிரக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோயில் நிலத்தை மோசடி செய்ததுமட்டுமின்றி, அந்த இடத்தில் அவர் சொந்தமாகக் கட்சி அலுவலகம் ஒன்றையும் நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோயில் சொத்து வளைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கோயில் இணை ஆணையர் தரப்பில் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், திமுக பிரமுகர் ராம்குமார் மீது வழக்குப் பதிவு செய்து முறைகேடு குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.