நடுரோட்டில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை... கொடைக்கானல் ரோட்டில் 3 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திமுக பிரமுகர் லட்சுமணன் (55) பணத் தகராறில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த 3 முக்கிய எதிரிகளை அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் தீவிர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்துள்ள நாகையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் லட்சுமணன் (வயது 55). லட்சுமணனுக்கும், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அஜித் (வயது 27) என்பவருக்கும் இடையே பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நீண்டநாட்களாகத் தகராறு நிலவி வந்தது.
சம்பவத்தன்று அஜித்தின் தூண்டுதலின் பேரில் ஆட்களுடன் வந்த கும்பல், முதலில் லட்சுமணனின் மகனை வழிமறித்துக் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அந்த தாக்குதலில் இருந்து தப்பிய மகன், உடனடியாக அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று புகார் அளித்துள்ளார்.
மகன் தாக்கப்பட்ட செய்தி அறிந்து பதறியடித்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த லட்சுமணனை, வழியிலேயே பதுங்கியிருந்த கும்பல் சூழ்ந்து கொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கொலையாளிகளைத் தேடி வந்த நிலையில் கொலையில் நேரடியாகத் தொடர்புடைய மீனாட்சிபுரம் அஜித் உட்பட 3 நபர்களைக் காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் கொலைக்கான பின்னணி குறித்தும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.