ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி வழக்கு - திமுக நிர்வாகி ராம்குமார் கைது!

 

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்து ஆக்கிரமித்த வழக்கில், திருச்சி ஸ்ரீரங்கம் திமுக பகுதிச் செயலாளர் எம்.ராம்குமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 7,515 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்துத் திமுக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இந்த நில விவகாரத்தில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது தொடர்பாகத் திமுக நிர்வாகி ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராம்குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் பெயருடன் தொடர்புடையவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.