திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு!
திருவையாறு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மீது அவதூறாகப் பேசியதாகக் காவல் துறை வழக்குப் பதிவு செய்து, நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் குறித்து ஒருமையில், தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்குப் பல்வேறு அரசியல் தரப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
பொதுவெளியில் அவதூறான மற்றும் கண்ணியமற்ற வார்த்தைகளைப் பேசிய துரை சந்திரசேகர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரித் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பரிசீலித்த காவல்துறையினர், திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மீது சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வழக்கு விசாரணைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் திமுக தொண்டர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.