திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

 

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவைத் தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் விமர்சித்துப் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. “சட்டமன்றத்தைப் பூட்டுவோம் எனக் கூறும் உன்னைச் சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம்; சட்டமன்றத்தைப் பூட்டினால் உனது எலும்புகள் இருக்காது” என அச்சுறுத்தும் தொனியில் அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

முதலமைச்சருக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய புகாரின் பேரில், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சார்பில் ஜாமீன் கோரித் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதே வேளையில், வழக்கில் தீவிர விசாரணை நடத்துவதற்காக அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி காவல்துறை தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இருதரப்பு மனுக்களையும் விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மற்றும் காவல்துறையின் காவலில் எடுக்கும் மனு ஆகிய இரண்டையுமே தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.