'வந்தே மாதரம் மசோதா அரசமைப்புச் சட்ட மோசடி' - திமுக எம்பி ஆ.ராசா குற்றச்சாட்டு!

 

மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ‘வந்தே மாதரம் மசோதா’ அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, மக்களவையின் அன்றைய அலுவல் திட்ட அறிவிப்பில் வந்தே மாதரம் மசோதா இடம்பெறாத நிலையில், திடீரென பிற்பகல் 3 மணிக்கு இர்மசோதாவை அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார். திமுகவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1937-ஆம் ஆண்டு ராஜேந்திர பிரசாத், இரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தி ஆகிய தலைவர்கள் இணைந்து, வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே தேசத்தைப் போற்றுவதாகவும், இதர பகுதிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருப்பதாகவும் தீர்மானித்து, முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடப் பரிந்துரைத்தனர்.

அரசியல் நிர்ணய சபையில் தேசியப் பாடலாக ஏற்றுப் பாடப்பட்டதும் அந்த முதல் இரண்டு பத்திகள் மட்டுமே. ஆனால், தற்போது ஒட்டுமொத்தப் பாடலையும் கட்டாயமாக்கும் வகையில் அரசு பொய் பிரச்சாரம் செய்து மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இஸ்லாமியச் சமூகத்திற்கு எதிரான வரிகளை வேண்டுமென்றே இந்தச் சட்டத்தின் மூலம் அரசு சேர்த்துள்ளதாகச் சாடிய அவர், வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவதை கட்டாயமாக்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல் என்றார். இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால், இச்சட்டம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என்றும் ஆ.ராசா தனது பேட்டியில் நம்பிக்கை தெரிவித்தார்.