திமுக எம்பி மகன் சித்தார்த் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

 

சென்னை அண்ணாசாலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக, வடசென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மற்றும் திமுக கவுன்சிலர் ராணி உள்ளிட்ட 4 பேர் மீது சென்னை அண்ணாநகர் போலீசார் பணமோசடி மற்றும் தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆளுங்கட்சி எம்பியின் மகன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதி மீது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசு என்பவர் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்த விரிவான புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்பரசுக்குச் சொந்தமான அண்ணாசாலை நிலத்தின் அசல் பத்திரங்களை, எம்பி மகன் சித்தார்த் மற்றும் அவரது கூட்டாளிகள் மிரட்டிப் பறித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், அந்த நிலப்பத்திரங்களை வங்கியில் சட்டவிரோதமாக அடமானம் வைத்து, பல கோடி ரூபாய் கடன் பெற்று அவர்கள் பணமோசடி செய்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்திற்கான தகுந்த தொகையையோ அல்லது பத்திரத்தையோ திருப்பித் தருமாறு அன்பரசு அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது, சித்தார்த், திமுக கவுன்சிலர் ராணி உள்ளிட்ட 4 பேரும் அன்பரசைப் பணத்தைத் திருப்பித் தர முடியாது என மிரட்டியதுடன், அவரது சாதியைக் குறிப்பிட்டு மிகவும் இழிவாகப் பேசி, உடல் ரீதியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அன்பரசு அளித்த புகாரை அடுத்து, அண்ணாநகர் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதில் உண்மைத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சித்தார்த், கவுன்சிலர் ராணி உள்ளிட்ட 4 பேர் மீதும் கூட்டுச் சதி, பணமோசடி, மிரட்டல் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.