திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் - உத்தேசப் பட்டியல் வெளியீடு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே காங்கிரஸ் வசம் உள்ள தொகுதிகளுடன், சில புதிய தொகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அமைச்சர் மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி உட்பட 40 தொகுதிகளை காங்கிரஸ் கோரியிருந்த நிலையில், 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையின் அடிப்படையில், தற்போது வெளியாகியுள்ள உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கியத் தொகுதிகளாக, எழும்பூர், வேளச்சேரி, ஸ்ரீபெரும்புத்தூர், பொன்னேரி, குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, நாங்குநேரி, ரீவைகுண்டம், தென்காசி/ஆலங்குளம், கோவை தெற்கு/சிங்காநல்லூர், ஈரோடு கிழக்கு, உதகை, தாராபுரம், உடுமலைப்பேட்டை, ஸ்ரீரங்கம், துறையூர், சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, திருவாடானை, அறந்தாங்கி, ராமநாதபுரம், சிதம்பரம், மயிலாடுதுறை, விருத்தாசலம், சோளிங்கர்.
காங்கிரஸ் தரப்பில் பத்மநாபபுரம், மேட்டூர், கும்பகோணம் போன்ற தொகுதிகளைப் பெறக் கடும் முயற்சி எடுக்கப்பட்டது. இருப்பினும், திமுக தனது சிட்டிங் அமைச்சர்களின் தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன்வராததால், சில தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஊத்தங்கரைக்குப் பதில் கிருஷ்ணகிரி அல்லது கலசபாக்கத்திற்குப் பதில் போளூர் போன்ற தொகுதிகள் பரிசீலனையில் உள்ளன.
இந்த உத்தேசப் பட்டியல் குறித்து இரு கட்சிகளின் தலைமைகளும் இன்று இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட உள்ளன. வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை திமுக வேட்பாளர் பட்டியலுடன் சேர்த்து, காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளின் அதிகாரப்பூர்வப் பட்டியலும் வெளியாக வாய்ப்புள்ளது.