“வேங்கைவயல் விவகாரத்தில் திமுக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” - அமைச்சர் வன்னியரசு குற்றச்சாட்டு!

 

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே முந்தைய திமுக அரசு வழக்குப்பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் வன்னியரசு, தலித் சமூகத்தினருக்கு இழைத்த துரோகத்திற்காக திமுக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

புகழ்பெற்ற வேங்கைவயல் விவகாரத்தில் நீதியை நிலைநாட்டத் தவறியதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது முந்தைய திமுக அரசுதான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அமுக்க முயன்றதாக அமைச்சர் வன்னியரசு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட காவலர் முரளி ராஜா என்பவர் தன்னிடம் நேரில் மனு அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலித் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் திமுக அரசு தொடர்ந்து பல்வேறு வஞ்சகங்களைச் செய்துவிட்டு, தற்போது தங்களுக்கு அவர்கள் மீது உண்மையான அக்கறை இருப்பது போலப் பொதுவெளியில் நாடகமாடுவதாக அவர் சாடியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட பல்வேறு துரோகங்களுக்கும், வேங்கைவயல் விவகாரத்தில் நடந்த அநீதிகளுக்கும் திமுக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.