"திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" - அமைச்சர் ராஜ்மோகன்!

 

கோவை பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ள அமைச்சர் ராஜ்மோகன், இந்த ஊழலுக்குப் பொறுப்பேற்றுத் தமிழக மக்களிடம் திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி எழுத்தாளர்கள் பெயரிலும், ஒரே பதிப்பகத்தின் வாயிலாகவும் பல மடங்கு அதிக விலைக்குப் புத்தகங்கள் வாங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், "கோவை பெரியார் அறிவுலகம் மட்டுமல்லாமல், திருச்சி, கடலூர் உள்ளிட்ட முக்கிய மாவட்ட நூலகங்களுக்கும் இதேபோன்று சர்ச்சைக்குரிய போலி மற்றும் தரம் குறைந்த புத்தகங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இந்த சர்ச்சைக்குரிய புத்தகங்களுக்கான மொத்த நிதியையும் திமுக ஆட்சிக் காலத்திலேயே அரசாங்கத்தால் முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுள்ளது" எனக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், நூலகக் கொள்முதலில் நடைபெற்றுள்ள இந்த நிதி முறைகேடுகளுக்கும் மற்றும் போலி நூல்கள் விநியோகத்திற்கும் திமுக அரசும் அதன் நிர்வாகமுமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்.

தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நூலகங்களைப் பயன்படுத்திப் பொதுமக்கள் பணத்தைச் சூறையாடியதற்காகத் திமுக அரசு உடனடியாகத் தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தினார்.

நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக நாளுக்கு நாள் புதிய ஆதாரங்களும் அரசியல் குற்றச்சாட்டுகளும் வெளியாகி வருவதால் இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் சூடுபிடித்துள்ளது.