சென்னையில் சரிந்த திமுக கோட்டைகள் ... அமைச்சர் சேகர்பாபு பின்னடைவு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சென்னையின் முக்கியத் தொகுதிகளில் ஆளுங்கட்சியான திமுகவிற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சேகர்பாபு தற்போதைய நிலவரப்படி பின்னடைவைச் சந்தித்துள்ளார். அங்குத் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் முன்னிலை பெற்று வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியின் 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பாபு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதேபோல், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பலமான முன்னிலையில் உள்ளார். சென்னையின் இதயப் பகுதியாகக் கருதப்படும் பல தொகுதிகளில் புதிய கட்சியான தவெக ஆளுங்கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்து வருகிறது.
மற்றொரு நட்சத்திரத் தொகுதியான சேப்பாக்கத்தில் ஆரம்பம் முதலே பின்னடைவில் இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது கடும் போராட்டத்திற்குப் பிறகு முன்னிலை வகித்து வருகிறார். இருப்பினும், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்னையின் பல பகுதிகளில் பின்தங்கி வருவது திமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலைக்குள் முழுமையான முடிவுகள் வெளியாகும் போது சென்னையின் அரசியல் சித்திரம் முழுமையாகத் தெரியவரும்.