கூட்டணி ஆட்சிக்கு  அடி போடும்  திராவிடக் கட்சிகள்... விஜய்யை தடுக்க  அதிரடி வியூகம்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை. இதனால் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தேவையான ஆதரவைத் திரட்ட விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் உதவியை விஜய் நாடியுள்ளார். இதனிடையே, யாரும் எதிர்பாராத திருப்பமாகத் தமிழகத்தின் இரு பெரும் துருவங்களான திமுக மற்றும் அதிமுக ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த புதிய கணக்கின்படி திமுகவின் 59 இடங்கள் மற்றும் அதிமுகவின் 47 இடங்களுடன் மற்ற சிறிய கட்சிகளும் இணைந்தால் பலம் 120 ஆக உயரும். இதில் பாமக, ஐயூஎம்எல், சிபிஐ, விசிக, சிபிஎம் போன்ற கட்சிகள் இணைந்தால் பெரும்பான்மையை மிக எளிதாக நிரூபித்து விட முடியும். இதன் மூலம் தமிழகத்தில் முதல் முறையாக ஒரு பெரிய கூட்டணி ஆட்சி அமைவதற்கும், அனைத்துக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பங்கு கிடைப்பதற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

திராவிடக் கட்சிகளின் இந்தத் திடீர் முடிவு, வளர்ந்து வரும் புதிய சக்தியான தவெகவை ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் தடுப்பதற்காகவே எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்தவர்கள் இப்போது அதிகாரத்திற்காக ஒன்றுசேர நினைப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரகசிய திட்டத்தால் தமிழக அரசியலில் வரும் நாட்களில் இன்னும் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.