திமுகவின் 505 வாக்குறுதிகள்: சாதித்தது என்ன? சரிந்தது எங்கே? நிஜத்தில் சாத்தியமா? புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை நிலவரம்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆளும் திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் தனது வாக்குறுதிகளை எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

திமுக தலைமை தனது 2021 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 505 வாக்குறுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் நிறைவேற்றிவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறது. 505-ல் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், 40 திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் ஜனவரி 2026-ல் அறிக்கை வெளியிட்டது. ஆனால், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெறும் 30 முதல் 40 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றன.

லேப்டாப் முதல் டேப் வரை:

கல்வித் துறையில் திமுக அளித்த வாக்குறுதிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச மடிக்கணினித் திட்டத்தைத் தொடராமல், மாணவர்களுக்கு 'டேப்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 2026 மார்ச் வரையிலான புள்ளிவிவரப்படி, பல அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் டேப் போய்ச் சேரவில்லை என்பது கள எதார்த்தம். மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி, வங்கிகளின் ஒத்துழைப்பு மற்றும் நிதி நெருக்கடி காரணமாகப் பெரிய அளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை. "முதல் கையெழுத்து நீட் ரத்து" என்ற முழக்கம், 5 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் சட்டப் போராட்டமாகவே நீடிக்கிறது.

விவசாயிகளின் நிலை: காகிதத்தில் மட்டுமே பாதுகாப்பு?

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த வாக்குறுதிகள் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது. நெல் ஒரு குவிண்டாலுக்கு ₹2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 2025-26 காலக்கட்டத்தில் மத்திய அரசின் விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்தால் கூட ₹2,400-ஐத் தாண்டவில்லை.

ஒரு டன் கரும்புக்கு ₹4,000 தருவதாகக் கூறிய நிலையில், தற்போது வரை அது முழுமையாக எட்டப்படவில்லை. இது டெல்டா மற்றும் மேற்கு மாவட்ட விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி பெற்ற திட்டங்கள்:

அனைத்து வாக்குறுதிகளும் தோல்வி என்று கூறிவிட முடியாது. சில திட்டங்கள் உலகளாவிய கவனத்தைப் பெற்றன:

மகளிர் இலவசப் பேருந்து பயணம் திட்டம் 100% வெற்றி பெற்ற திட்டமாகப் பார்க்கப்பட்டது. ஆனாலும், ‘ஓசி’ பயணம் என்று அமைச்சர்கள் துவங்கி, பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் செல்லும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வரையிலும் திட்டத்தை பெண்களிடம் கடுப்படைய செய்து விட்டனர்.

புதுமைப் பெண் & தமிழ்ப் புதல்வன்:

கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கும் இத்திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் இல்லாதபோதும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுள்ள 1 கோடிக்கும் மேலான பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுவது இப்போதைய தேர்தலிலும் திமுகவின் துருப்புச் சீட்டாக உள்ளது.

துறை

வாக்குறுதி (2021)

தற்போதைய நிலை (2026)

கல்விக்கடன்

முழுமையாக ரத்து

இன்னும் நிறைவேற்றப்படவில்லை

நெல் MSP

₹2,500 / குவிண்டால்

சுமார் ₹2,350 - ₹2,400 மட்டுமே

கரும்பு MSP

₹4,000 / டன்

₹3,000 - ₹3,300 வரை மட்டுமே

நீட் தேர்வு

ரத்து செய்யப்படும்

சட்டப் போராட்டம் தொடர்கிறது

மகளிர் உரிமைத் தொகை

மாதம் ₹1,000

நிறைவேற்றப்பட்டது