"திமுகவின் குடும்ப அரசியல்... எகிறும் தமிழக கடன்": கோவையில் பிரதமர் மோடி அனல் பறக்கும் பேச்சு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவையில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். பாசம் நிறைந்த, கடின உழைப்பாளிகளைக் கொண்ட கொங்கு மண்ணில் பேசுவதில் பெருமிதம் கொள்வதாகத் தனது உரையைத் தொடங்கிய பிரதமர், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, திமுகவின் ஊழல் மலிந்த அரசியலை கோவை மக்கள் ஏற்கனவே புறக்கணித்துவிட்டதாக அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்தது குறித்துப் பேசிய பிரதமர், "சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் வருவதே எனது ஆசை. ஆனால், பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் விரும்பவில்லை. அதனால்தான் இந்த மசோதாவை அவர்கள் தடுத்து நிறுத்திவிட்டனர். சாதாரணப் பெண்கள் முன்னேறுவதை திமுகவும் காங்கிரசால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். இது போராட்டத்தின் முடிவு அல்ல, பெண்களுக்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து போராடும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்துப் பேசிய மோடி, "கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 14 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இன்று தமிழகத்தின் கடன் சுமை விண்ணைத் முட்டும் அளவிற்கு எகிறியுள்ளது. தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. திமுகவின் கொள்கை என்பது 'குடும்பத்துக்கு, குடும்பத்தால், குடும்பத்துக்காக' என்பதுதான். முதல்வர், துணை முதல்வர், எம்.பி என அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்" என்று குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டிய பிரதமர், "பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் மசோதாவை ஏன் எதிர்த்தீர்கள் என திமுகவினரைப் பார்த்துக் கேள்வி எழுப்புங்கள்" என மக்களிடம் கேட்டுக்கொண்டார். வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் தேர்தலில், குடும்ப அரசியலுக்கு மக்கள் தெளிவான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், தாமரை சின்னத்திற்கு வாக்களித்துத் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் தனது உரையில் முழங்கினார்.