திமுக ‘பரிசு கூப்பன்’ மோதல்: இளம்பெண் தற்கொலை! விஜய் கடும் கண்டனம்!

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக விநியோகித்த பரிசு கூப்பன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால், சிந்துஜா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள், அந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்குப் பரிசு கூப்பன்களை விநியோகித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சிந்துஜா என்ற இளம்பெண்ணின் வீட்டிற்கு மட்டும் கூப்பன் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து சிந்துஜா கேட்டபோது, அங்கிருந்த திமுக நிர்வாகிகள் அவரை ஆபாசமாகப் பேசி, உடல்ரீதியாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. பொதுவெளியில் ஏற்பட்ட இந்த அவமானத்தாலும், மன உளைச்சலாலும் சிந்துஜா இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள விஜய், "வாக்காளர்களுக்கு ரூ.8,000 மதிப்பிலான பரிசு கூப்பன்களை வழங்கி வரும் திமுகவின் தேர்தல் நாடகத்தால், இன்று ஒரு இளம்பெண்ணின் உயிர் பறிபோயிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதிகார மிரட்டலால் பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் தற்கொலையை அடுத்து, மண்ணச்சநல்லூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பண விநியோகம் மற்றும் கூப்பன் கலாச்சாரம் குறித்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தத் தற்கொலைச் சம்பவம் ஆளுங்கட்சிக்குத் தேர்தல் நெருக்கத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.