"திமுகவின் அதிகார மமதை" -  ஆ.ராசாவுக்கு தவெக கடும் கண்டனம்!

 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்பொழுது தவெக மற்றும் திமுக இடையே புதிய அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. அதிகாரப் பகிர்வு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் எடுத்துள்ள முடிவுகளை விமர்சித்த ஆ.ராசாவுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப அணி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்பது என முடிவு செய்துள்ள சூழலில், ஆ.ராசாவின் ட்வீட் தார்மீக அரசியல் எல்லைகளை மீறியுள்ளதாகத் தவெக ஐடி விங் விமர்சித்துள்ளது. "அதிகாரப் பகிர்வு என்பது மக்களாட்சியின் மிக முக்கியமான கோட்பாடு. இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக திமுக எம்.பி ஆ.ராசா பதிவிட்டுள்ள ட்வீட் அநாகரிகத்தின் உச்சமாகும்.

சமூக நீதி பேசும் பிற கட்சிகள் தங்களின் உரிமைகளையோ அல்லது தங்களின் மாற்று அரசியல் கருத்துகளையோ முன்வைத்தால், அவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் திமுகவினரின் அதிகார மமதையையே அப்பட்டமாகக் காட்டுகிறது."

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், ஐயூஎம்எல் மற்றும் விசிக ஆகிய முக்கியக் கட்சிகள் தற்பொழுது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவையில் இணையப் போவதாக அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இந்தக் கூட்டணி மாற்றங்கள் மற்றும் தவெக-வின் 'அதிகாரப் பகிர்வு' கொள்கை குறித்து திமுக தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்குத் தவெக ஐடி விங் கொடுத்துள்ள இந்த அதிரடிப் பதிலடி தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.