வாக்கு எண்ணும் மையங்களில் திமுக தில்லுமுல்லு?! - தேர்தல் ஆணையத்தில் தவெக புகார்... மத்திய படை பாதுகாப்பு கோரி மனு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழக வெற்றி கழகம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இன்று (ஏப். 29) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினர் திட்டமிட்டுத் தகராறில் ஈடுபடப்போவதாக எங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் முடிவுகளில் தில்லுமுல்லு செய்து, குளறுபடிகளை ஏற்படுத்த அவர்கள் முயல வாய்ப்புள்ளது. தமிழக காவல்துறையின் பாதுகாப்பை மட்டும் நம்பாமல், வாக்கு எண்ணும் மையங்களில் மத்தியப் பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்."
வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, தவெக தலைவர் விஜய் தனது வேட்பாளர்களிடம் 17C படிவங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகார், வாக்கு எண்ணிக்கையின் போது தவெக மிகத் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபடப்போவதைக் காட்டுகிறது. குறிப்பாக, திமுக மற்றும் தவெக இடையே பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் புகார் முக்கியத்துவம் பெறுகிறது.