பாக்யராஜின் முதல் மனைவி யார் தெரியுமா? "வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த நடிகை..." - உருக்கமான பிளாஷ்பேக்!

 

இயக்குநர் பாக்யராஜின் மறைவால் நாளை ஒரு நாள் முழுவதும் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று மனைவி பூர்ணிமா மற்றும் மகன் சாந்தனுவைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், கே.பாக்யராஜின் தற்போதைய மனைவி பூர்ணிமா என்பதைத் தாண்டி, அவரது திரையுலக மற்றும் ஆரம்பக்கால தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த அவரது முதல் மனைவி நடிகை பிரவீணா குறித்த நெகிழ்ச்சியான தகவல்கள் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.

இயக்குநர் கே.பாக்யராஜின் ஆரம்பக்கால வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. தங்குவதற்கு இடமும், உணவிற்கும் வழியின்றித் தவித்த கால கட்டத்தில் தான் அவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்தார். ஆந்திராவில் இருந்து சென்னை வந்த தெலுங்கு நடிகையான பிரவீணாவிற்கு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மூலமாகத் தமிழில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. பிரவீணாவிற்குத் தமிழ் பேசத் தெரியாததால், அவருக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகப் பாக்யராஜ் நியமிக்கப்பட்டார்.

அந்தப் பழக்கத்தின் மூலம் பாக்யராஜின் வறுமையையும், திறமையையும் புரிந்துகொண்ட பிரவீணா, அவருக்குத் தங்குமிடம், உணவு, உடை என உதவிகளைச் செய்து தோள் கொடுத்தார். இந்த அணுக்கம் இருவருக்குள்ளும் காதலாக மலர்ந்தது. பாக்யராஜ் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குநராகத் தடம் பதித்து ஓரளவிற்குத் திரையுலகில் உயர்ந்த பின்னர், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

தங்களின் காதல் விபரத்தை எம்.ஜி.ஆரிடம் கூற, அவரும் மனமுவந்து சம்மதித்து, கடந்த 1981ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலேயே இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்பும் பிரவீணா தொடர்ந்து படங்களில் நடித்தார். பாக்யராஜின் இயக்கத்தில் உருவான 'மௌன கீதங்கள்', 'இன்று போய் நாளை வா' மற்றும் பாக்யராஜுக்கு இரட்டை ஜோடியாக நடித்த 'பாமா ருக்மணி' போன்ற திரைப்படங்கள் இவர்களின் திரைக்கூட்டணிக்குச் சான்றாகும்.

சினிமாவிலும், இல்லற வாழ்விலும் மகிழ்ச்சியுடன் பயணித்த இந்த ஜோடியின் சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. திருமணமான இரண்டே ஆண்டுகளில், அதாவது 1983ஆம் ஆண்டு நடிகை பிரவீணாவுக்குக் கடுமையான மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. தீவிரச் சிகிச்சை அளித்தும் பலனின்றி, தனது 25வது வயதிலேயே பிரவீணா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இழப்பு அன்றைய காலகட்டத்தில் பாக்யராஜை மீளாத் துயரிலும், கடுமையான மன உளைச்சலிலும் ஆழ்த்தியது.

இதன் பின்னரே, சில ஆண்டுகள் கழித்து அவர் நடிகை பூர்ணிமாவைத் திருமணம் செய்து கொண்டார். இன்று வரை பாக்யராஜின்  திரைப்பயணத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டதில் அவரது முதல் மனைவி பிரவீணாவிற்கு மிக முக்கியப் பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.