"வெறும் விசில் சத்தத்திற்கு முட்டுக்கொடுக்கிறதா?" - ஆ.ராசாவுக்கு குவியும் கண்டனங்கள்!

 

திமுக கூட்டணியில் இருந்து விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டணி அமைச்சரவையில் இணையப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த திடீர் கூட்டணி மாற்றங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள சூழலில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று தற்பொழுது பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

தவெக அமைச்சரவையில் விசிக-வின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் ஆகியோர் தங்களின் பங்களிப்பை உறுதி செய்ததைக் குறிப்பிட்டு, ஆ.ராசா எம்.பி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

“முன் 'ஏற' தரப்பட்ட 'ஏணியும்' மூட சாதியை நொறுக்க வேண்டிய 'சிறுத்தையும்' வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி - புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் 'காலதேச வர்த்தமான' த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே! ”

ஆ.ராசா தனது பதிவில் நேரடியாகக் கட்சிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல், குறியீட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தித் தங்களின் முன்னாள் கூட்டணிக் கட்சிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். ஐயூஎம்எல் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான 'ஏணி' மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெயரைக் குறிப்பிடும் 'சிறுத்தை' ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தி, அவர்கள் தங்களின் கொள்கைகளை விடுத்து நகர்ந்துள்ளதாக விவரித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் அரசியல் வருகையை 'வெறும் விசில் சத்தம்' என விமர்சித்துள்ள அவர், அதற்கு இந்தக் கட்சிகள் முட்டுக் கொடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய இந்த அரசியல் சூழலை எதிர்கொள்ளத் தந்தை பெரியாரின் 'காலதேச வர்த்தமானம்' (கால சூழலுக்கு ஏற்ப மாறுவது) என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப காத்திருந்து, திமுக களமாடி மீண்டும் வெற்றியைப் பெறும் எனத் தனது பதிவில் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு என்ற தத்துவத்தின் அடிப்படையில் தவெக அமைச்சரவையில் இணைய முடிவெடுத்துள்ள சமூக நீதி கட்சிகளை ஆ.ராசா இத்தகைய தரம் தாழ்ந்த மற்றும் அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது தார்மீக அரசியல் எல்லைகளை மீறிய செயல் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே தவெக தகவல் தொழில்நுட்ப அணி , ஆ.ராசாவின் இந்தப் பதிவு "திமுகவின் அதிகார மமதையையே காட்டுகிறது" எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், விசிக மற்றும் ஐயூஎம்எல் தரப்பிலிருந்தும் இதற்குப் பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருவதால் தமிழக அரசியல் களம் தற்பொழுது பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.