"ஆளுநரை எதிர்க்கும் துணிவு விஜயிடம் உள்ளதா?" - ஆளூர் ஷாநவாஸ்
தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் கறார் காட்டி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் நிலைப்பாடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாகத் தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "ஆளுநர் வேண்டுமென்றே ஆட்சி அமைப்பதில் இடையூறு செய்து வருகிறார். இதனைத் துணிச்சலாகக் கண்டிக்கத் தவெக அஞ்சுகிறது. ஆளுநரை எதிர்க்கும் துணிவு விஜயிடம் இருக்கிறதா?" என வினவியுள்ளார்.
"ஆளுநரை எதிர்ப்பது என்பது மறைமுகமாக பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்குத் தேவையான கொள்கை உறுதியும், துணிச்சலும் விஜயிடம் உள்ளதா என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்" என்று ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலையில் விஜய்க்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், விஜய்யின் அரசியல் துணிச்சலைச் சந்தேகிக்கும் வகையில் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆளுநர் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் கோரிப் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், தவெக தரப்பு இதுவரை ஆளுநருக்கு எதிராக நேரடியான போராட்டங்களிலோ அல்லது கடுமையான அறிக்கைகளிலோ ஈடுபடாமல், சட்ட ரீதியான நகர்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இதனைச் சுட்டிக்காட்டியே ஷாநவாஸ் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.