“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி குறித்து மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
தமிழ்நாட்டில் நிலவிவரும் கடுமையான விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைக் சுட்டிக்காட்டி தவெக அரசை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மளிகைக் கடைகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் நிலவரங்களைக் கேட்டறிந்த அவர், சமூக வலைதளப் பதிவின் மூலம் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளைச் சாடியுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மு.க.ஸ்டாலின், அங்குள்ள மளிகைக் கடை ஒன்றிற்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் குறித்துக் கடையின் உரிமையாளர்களிடமும் பொதுமக்களிடமும் விசாரித்தார். அப்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்த விலையைக் காட்டிலும் தற்போது அனைத்துப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது தெரியவந்தது.
இது குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "எம்.எல்.ஏ. ஷாப்பிங்கில் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, சாதாரண மக்கள் மளிகைக் கடையில் கூட சரியாக ஷாப்பிங் செய்ய முடியாமல் எந்தளவுக்குக் கஷ்டத்தில் தவிப்பது என்பது தெரியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளதால், எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்பதாகக் கவலைத் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வை மட்டுமின்றி, மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலை மற்றும் தொழில் துறை வளர்ச்சி முடங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்பு இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோதிலும் கூட, 'திராவிட மாடல்' ஆட்சியில் தமிழ்நாடு எப்போதும் ஏறுமுகத்திலேயே இருந்தது. ஆனால், இன்றைய அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு மட்டும் வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் சரிவைச் சந்தித்து வருவது கவலை அளிக்கிறது.
தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான 'Guidance TN'-ல் இருந்த அனுபவமிக்க வல்லுநர்கள் பலரும், இந்த ஆட்சி வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்து வேறு மாநிலங்களுக்குச் சென்று விட்டதாகச் செய்திகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம், விலைவாசி உயர்வு, மின்சாரம், தொழில்துறை, சட்டம்-ஒழுங்கு, மருத்துவம் மற்றும் பால்வளம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வேகமாகப் பின்னோக்கிச் செல்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மக்களின் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், எதார்த்தத்தை மறைத்து விட்டு விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்துவதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
"ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறைந்து விடுமா? விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது போல எல்லாவற்றிலும் 'வெற்றி' என ஸ்டிக்கர் ஒட்டினால் போதும் என நினைக்கும் தற்போதைய அரசிடம் மாட்டிக்கொண்டு பொதுமக்கள் தவித்து வருகின்றனர்" என்று அவர் தனது பதிவில் விளாசியுள்ளார்.