அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவது அவர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா? - சீமான் கேள்வி!
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் தொடர்ச்சியாகத் திட்டங்களை அறிவித்து வருவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் அனைத்துத் திட்டங்களும் விதி 110-ன் கீழ் மட்டுமே அறிவிக்கப்படும் என்றால், எதற்காகத் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், அதன் மீதான விவாதங்கள் எதற்கு என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்ஜெட்டில் இடம்பெறாத புதிய திட்டங்களைச் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் முதல்வர் வெளியிடுவது மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும், இது விளம்பர வெற்று அறிவிப்புகளாக உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
அமைச்சர்கள் வெளியிட வேண்டிய துறைசார்ந்த அறிவிப்புகளை முதலமைச்சரே வெளியிடுவது அந்தந்த அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா என்றும், அனைத்துத் திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தவை என்று காட்ட இதன் மூலம் முயற்சிக்கப்படுகிறதா என்றும் அவர் வினவியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 17 முதல் விதி 110-ன் கீழ் ரூ.73,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே அதிக அளவில் கடன் வாங்கப்படும் சூழலில் இவ்வளவு பெருந்தொகையான நிதிக்கு எங்கு செல்வது என்றும், இதுவா தமிழ்நாட்டை முன்னேற்றும் முறை என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.