அதிகரிக்கும் நாய்க்கடி அவலம்... சேலம் முதலிடம் - பொது சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவல்!

 

தமிழகத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்பான அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்களைப் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டில் இதுவரை 4 லட்சத்து 68 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரேபிஸ் தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு முழுவதும் 6,25,700 பேர் நாய்க்கடிக்கு ஆளாகியிருந்த நிலையில், 34 பேர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்தனர்.

மாவட்ட வாரியாக சேலம்: 28,166 பேர் (அதிகபட்ச பாதிப்பு), திருநெல்வேலி: 23,095 பேர், கடலூர்: 22,113 பேர், சென்னை: 9,229 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளின் தரவுகளை ஆய்வு செய்ததில், நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது. 31 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்களே நாய்க்கடிக்கு அதிக அளவில் ஆளாகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, 10 வயதுக்குட்பட்ட சிறார்களே தெருநாய்களின் தாக்குதலுக்கு அதிகளவில் இலக்காகின்றனர்.

உச்ச நீதிமன்றம் தலையிட்டு வழிகாட்டுதல்களை வழங்கிய போதிலும், நாய்க்கடிப் புகார்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக முதன்மை முன்னுரிமை அளித்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.