தூத்துக்குடியில் 9 பேரைக் கடித்து குதறிய வெறிநாய்... பொதுமக்கள் பீதி!
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் சிறுமியை வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டிக் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்திருப்பேரை புளியமரத்து தெரு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரியும் நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று காலையில் அப் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று, சாலையில் சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆடுகளைத் திடீரென விரட்டிச் சென்று கடித்தது.அதனைத் தொடர்ந்து, சாலையில் நடந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, மாரி (45), பேச்சியம்மாள் (25), கவிதா (17) ஆகியோரை அந்த நாய் சரமாரியாகக் கடித்துக் குதறியது. வெறிநாய் கடிபட்ட நபர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த சிறுமி உட்பட 4 பேர் உடனடியாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதே நாய் தென்திருப்பேரையைச் சேர்ந்த பால்சாமி, சுந்தரி உள்ளிட்ட மேலும் 3 பேரை ஊடுருவிக் கடித்ததில், அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர, அதே பகுதியில் நாய் கடிக்கு ஆளான மேலும் 2 பேர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளனர்.
ஒரே நாளில் 9 பேரைக் கடித்துக் குதறிய இந்த வெறிநாய் சம்பவத்தால் தென்திருப்பேரை பகுதி பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.