தேர்தலில் படுதோல்வி... கழுதை மேய்க்கும் வேலையில் பிஸியான மாஜி எம்எல்ஏ!

 

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டவர் அருள். இவர் அந்தத் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இந்தத் தேர்தலில் அவரை எதிர்த்து திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் களம் இறங்கினர். இதில் 12391 வாக்குகளை மட்டுமே பெற்ற அருள் 4வது இடத்தைப் பிடித்து படுதோல்வி அடைந்தார்.

தேர்தலில் தோல்வியைத் தழுவியதையடுத்து அருள் தனது சொந்தப் பணிகளுக்குத் திரும்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் தனது தோட்டத்தில் உள்ள மாடு, குதிரை மற்றும் கழுதைகளுடன் அவர் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தப் புகைப்படங்களுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது தனது தோட்டத்தில் புதிதாகப் பிறந்த குட்டி கழுதையை மேய்க்கும் பணியில் தான் மிகவும் பிஸியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பதவியில் இல்லாத நேரத்தில் மக்கள் பணிகளைத் தாண்டி தனது வாழ்வாதாரப் பணிகளில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். தோல்வியால் துவண்டு விடாமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய அவரது இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவிகள் நிரந்தரம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரது பதிவு அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.